அமெரிக்காவின் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்களிலிருந்து தொழில்நுட்ப ரகசியங்களை திருடுவதாக DeepSeek உள்ளிட்ட சீன நிறுவனங்கள் மீது அமெரிக்க வெளியுறவுத்துறை பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. இது தொடர்பாக உலகெங்கிலும் உள்ள தனது தூதரகங்களுக்கு அமெரிக்கா அவசர உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அமெரிக்காவின் பெரிய மற்றும் விலையுயர்ந்த AI மாடல்களில் இருந்து தரவுகளை பிரித்தெடுத்து மிக குறைந்த செலவில் சீன நிறுவனங்கள் தங்கள் மாடல்களை உருவாக்குவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, உலகையே வியக்க வைத்த DeepSeek நிறுவனம், OpenAI போன்ற அமெரிக்க நிறுவனங்களின் அறிவுசார் சொத்துக்களை திருடி அதன் மூலம் ‘V4’ போன்ற புதிய மாடல்களை உருவாக்கியுள்ளதாக அமெரிக்கா தெரிவிக்கிறது. இதனால் தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக்கு ஆபத்து ஏற்படும் என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை சீனா வன்மையாக மறுத்துள்ளது. அமெரிக்காவின் இத்தகைய புகார்கள் அடிப்படை ஆதாரமற்றவை என்றும், சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சியை தடுக்கும் நோக்கில் இவை திட்டமிட்டு பரப்பப்படுவதாகவும் வாஷிங்டனில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. அதிபர் டொனால்ட் டிரம்ப் விரைவில் சீனாவுக்கு செல்லவுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த ‘தொழில்நுட்பப் போர்’ மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

