மனு பாக்கர் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி குறித்த சமீபத்திய சர்ச்சை, இந்திய விளையாட்டு உலகில் நிலவும் ‘கிரிக்கெட் மைய’ மனப்போக்கை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்று சரித்திரம் படைத்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கரிடம், 15 வயது கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் வளர்ச்சி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மனு, “நல்ல வழிகாட்டுதல் இருந்தால் வயது ஒரு தடையல்ல” என்று முதிர்ச்சியுடன் கூறினார்.
இருப்பினும், இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. ஒரு ஒலிம்பிக் பதக்க வெற்றியாளரிடம், அவரது சாதனைகளை பற்றி பேசுவதை விடுத்து, வளர்ந்து வரும் ஒரு கிரிக்கெட் வீரரை பற்றி கருத்து கேட்பது மனுவின் உழைப்பையும், துப்பாக்கி சுடுதல் விளையாட்டையும் அவமதிக்கும் செயல் என ரசிகர்கள் கொதிப்படைந்துள்ளனர்.
கிரிக்கெட் வீரர்களிடம் மற்ற விளையாட்டு வீரர்களை பற்றி இதுபோல கேள்விகள் கேட்கப்படுகிறதா?” என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர். முன்னாள் கே.கே.ஆர் இயக்குனர் ஜாய் பட்டாச்சார்யா, “ஒரு ஒலிம்பிக் வெற்றியாளரிடம் இப்படி கேட்பது அநீதி” என சாடியுள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் மற்றும் யு-19 போட்டிகளில் அபாரமாக செயல்பட்டு வருவது உண்மையானாலும், ஒரு விளையாட்டு துறையின் உச்சத்தை அடைந்தவரை மற்றொரு துறையின் வளர்ந்து வரும் வீரருக்கு சான்றிதழ் அளிக்க சொல்வது ஊடகங்களின் ஒருதலைப்பட்சமான போக்கையே காட்டுகிறது.

