சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் குறிப்பிட்ட தொகையை வைப்புத்தொகையாக செலுத்த வேண்டியது அவசியமாகும். தற்போதுள்ள விதிகளின்படி, சட்டப்பேரவை தேர்தலில் பொதுப்பிரிவினர் 10,000 ரூபாயும், எஸ்சி/எஸ்டி பிரிவினர் 5,000 ரூபாயும் வைப்புத்தொகையாகச் செலுத்த வேண்டும்.
அதேபோல, நாடாளுமன்றத் தேர்தலில் பொதுப்பிரிவினருக்கு 25,000 ரூபாயும், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 12,500 ரூபாயும் வைப்புத்தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிடும் சில வேட்பாளர்கள் தோல்வியடைவதோடு மட்டுமல்லாமல், அவர்கள் செலுத்திய இந்த டெபாசிட் தொகையையும் இழக்கும் நிலை ஏற்படுகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, ஒரு வேட்பாளர் தான் போட்டியிட்ட தொகுதியில் பதிவான மொத்த செல்லுபடியாகும் வாக்குகளில் குறைந்தபட்சம் ஆறில் ஒரு பங்கு வாக்குகளை பெற வேண்டும். சதவீத கணக்கில் பார்த்தால் இது 16.66 சதவீதமாகும்.
இந்த குறிப்பிட்ட அளவு வாக்குகளை பெற தவறும் வேட்பாளர்களுக்கு அவர்கள் செலுத்திய வைப்புத்தொகை திரும்ப கிடைக்காது. இதுவே அரசியல் வட்டாரத்தில் ‘டெபாசிட் இழப்பு’ என்று அழைக்கப்படுகிறது.
இத்தகைய சூழலில் வைப்புத்தொகையை இழப்பதோடு, சம்பந்தப்பட்ட கட்சிகள் தங்கள் அரசியல் அங்கீகாரத்தையும் இழக்கும் அபாயம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாளை நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் எத்தனை வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

