ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அடுத்த வாரம் டெல்லிக்கு வரவுள்ளார். மே 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெறும் BRICS வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பில் பங்கேற்க உள்ளார். அப்பாஸ் அராக்சி-யின் வருகை மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
ஈரான் போர் தாக்குதல் குறைந்தாலும், ஹார்முஸ் வழியாக இந்தியாவுக்கு கச்சா எண்ணெய், எரிவாயு சப்ளை வரவில்லை. இதனால் நாளுக்கு நாளுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வு அச்சம் அதிகரித்துள்ளது. இன்றளவு எரிவாயு சிலிண்டருக்காக மக்கள் தவித்து வருகின்றனர்.
இந்த பயணம் சாதாரண அரசியல் சந்திப்பு இல்லை என மேற்கத்திய நாடுகள் பார்க்கின்றன. காரணம், கடந்த மாதம் அப்பாஸ் அராக்சி பாகிஸ்தான், கத்தார், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றார். இதை தொடர்ந்து இந்தியாவுக்கு வருகிறார்.
இதனால், அப்பாஸ் அராக்சி இந்த சந்திப்பு இந்தியா – ஈரான் உறவுகளிலும், BRICS அமைப்பின் எதிர்கால அரசியல் பங்களிப்பிலும் முக்கிய திருப்பமாக இருக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஈரான் இந்தியாவுக்கான எரிபொருள் சப்ளையை மேம்படுத்தவும், அதிகரிக்கவும் இந்த சந்திப்பு பயன்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் BRICS கூட்டமைப்பில் இணைந்த ஈரான், அதன் பின்னர் நடைபெறும் முக்கிய கூட்டங்களுக்கு தொடர்ந்து உயர்மட்ட பிரதிநிதிகளை அனுப்பி வருகிறது. உலக அரசியலில் மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்திற்கு மாற்றாக உருவாகும் சக்திவாய்ந்த கூட்டணியாக BRICS-ஐ ஈரான் பார்க்கிறது.
மேலும் அமெரிக்கா – ஈரான் – இஸ்ரேல் மத்தியில் நிலவும் பதற்றமான சூழ்நிலையில், BRICS நாடுகள் தலையிட்டு சமாதான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் ஈரானுக்கு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா தற்போது BRICS தலைமை பொறுப்பில் இருப்பதால், இந்த விவகாரத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்பதையும் ஈரான் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

