ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸை தக்கவைக்க, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சுமார் 113 கோடி ரூபாய் மதிப்பிலான பிரம்மாண்ட ஒப்பந்தத்தை வழங்க முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐபிஎல் உள்ளிட்ட டி20 லீக் தொடர்களில் விளையாடுவதற்காக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற சில ஐபிஎல் உரிமையாளர்கள் கம்மின்ஸிற்கு சுமார் 6.6 மில்லியன் டாலர் வரை ஆஃபர் செய்ததாக கூறப்படும் நிலையில், ஆஸ்திரேலிய வாரியம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.
இந்த மூன்று ஆண்டு கால ஒப்பந்தத்தின்படி, கம்மின்ஸ் ஆண்டுக்கு 4 மில்லியன் டாலர் ஊதியமாக பெறுவார். டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு முன்னுரிமை அளிக்கவும், கம்மின்ஸ் போன்ற முக்கிய வீரர்கள் தேசிய அணிக்காக தொடர்ந்து விளையாடுவதை உறுதி செய்யவும் இந்த நீண்ட கால ஒப்பந்தம் முன்மொழியப்பட்டுள்ளது.
இது குறித்துப் பேசிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகி ஜேம்ஸ் ஆல்சோப், “கம்மின்ஸ் போன்ற பல வடிவ கிரிக்கெட்டிலும் அசத்தும் வீரர்களுக்கு சந்தையில் பெரும் மவுசு உள்ளது. அவர்களை தக்கவைப்பதே எங்களின் முக்கிய நோக்கம்,” என்று தெரிவித்தார்.
தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக இருக்கும் கம்மின்ஸ், ஐபிஎல் 2026 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருதையும் வென்றார். கிளப் கிரிக்கெட்டிற்கும் சர்வதேச கிரிக்கெட்டிற்கும் இடையே நடக்கும் இந்த பண போட்டியில், ஆஸ்திரேலிய வாரியம் எடுத்துள்ள இந்த முடிவு கிரிக்கெட் உலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

