உக்ரைன் தலைநகர் கீவ் நகரின் மீது, சமீபத்திய வாரங்களில் இல்லாத அளவுக்கு ரஷ்ய ராணுவம் நேற்று நள்ளிரவில் நடத்தியுள்ள மிகக் கொடூரமான வான்வழித் தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா வசம் உள்ள பகுதியில் உக்ரைன் படைகள் நடத்திய தாக்குதலுக்குப் பழிவாங்கும் நடவடிக்கை என்று சொல்லியே ரஷ்யா இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையே ஆரம்பித்த போர் ஆண்டு கணக்கில் தொடர்கிறது. இரு நாடுகளும் போரை விட்டுவிட்டு அமைதிக்குத் திரும்பும் எனப் பலரும் நினைத்தனர். ஆனால், முடியாத கதையைப் போல இந்தப் போர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்தச் சூழலில் தான் உக்ரைன் தாக்குதலுக்குப் பழிவாங்குகிறோம் எனச் சொல்லி ரஷ்யா மிகப் பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது.
நேற்று நள்ளிரவு முழுவதும் உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள செர்காசி, கார்கிவ், ஒடெசா உள்ளிட்ட பல பிராந்தியங்களில் ஏவுகணைகளும், ட்ரோன்களும் மழை போலப் பொழிந்துள்ளன. விடிய விடியக் கேட்ட பயங்கர வெடிச்சத்தங்களால் மக்கள் அலறியடித்துக் கொண்டு மெட்ரோ நிலையங்கள் மற்றும் பாதுகாப்பு மையங்களுக்குள் தஞ்சமடைந்தனர்.
600 டிரோன்கள், 90 அதிநவீன ஏவுகணைகள் என்று ஒரு மெகா தாக்குதலை ரஷ்யா நடத்தியுள்ளது. இருப்பினும், அதில் 549 ட்ரோன்கள், 55 ஏவுகணைகளை உக்ரைன் வான் பாதுகாப்புப் படை தடுத்துவிட்டன. ஆனால், உக்ரைன் வான் பாதுகாப்புப் படையைத் தாண்டியும் மற்ற டிரோன்களும் ஏவுகணைகளும் உக்ரைனைத் தாக்கின.

