கடந்த திமுக ஆட்சியில் சிறுமிகள், பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட போது அதை கடுமையாக விமர்சனம் செய்தவர் தவெக தலைவர் விஜய். ஆனால் தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் மாறியுள்ள நிலையில் கோவை சூலூரில் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அதோடு, கடந்த சில நாட்களில் மேலும் சில கொலை சம்பவங்களும் நடந்துள்ளது, இந்நிலியில், முன்னாள் துணை முதல்வரும், சென்னை சேப்பாக்க்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கீழ்கண்டவாறு பதிவிட்டு இருக்கிறார்.
தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களில் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள், 19 பாலியல் குற்றங்கள் என செய்திகளில் வந்த சம்பவங்கள் மட்டுமே இவை. மாற்றம், மாற்றம் என்று சொன்னவர்களின் ஆட்சியில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு மாறி இருப்பதற்கு இந்த சம்பவங்களே சாட்சி.
கோவை சூலூர் சிறுமிக்கு நடந்த கொடுமையின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் விழுப்புரம் மாவட்டத்தில் மற்றொரு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருக்கிறது. சூலூர் சிறுமியின் தாய்க்குச் சொல்லாமல் அவசரகதியில் உடல் எரிக்கப்பட்டிருக்கிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் படுகொலை செய்யப்பட்டிருக்கிறான். மேலும், கோவையில் ஒரு இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருக்கிறது. முதலமைச்சரின் சொந்த தொகுதியான பெரம்பூரில் போதைக் கும்பல் ஒன்று 13 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து அட்டூழியம் செய்துள்ளது.
மாண்புமிகு முதல்வர் அவர்களே.. இது தமிழ்நாடா, உத்தரபிரதேசமா? எங்கே போனது உங்க சிங்கப்பெண் அதிரடிப் படை? தேர்தலுக்கு முன்பு வீர வசனங்களை பேசிய முதலமைச்சர் இப்போது ஏன் வாய் திறக்க மறுக்கிறார்?
அதிகரிக்கும் குற்றச் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் தவிக்கும் போது, இன்று காலை கண்துடைப்புக்காக காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தை நடத்தி பொத்தாம் பொதுவாக அறிக்கை விடுவதை ஏற்க முடியாது. நிலைமையின் தீவிரத்தை முதலில் அரசு உணர வேண்டும்.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்க, முதலமைச்சர் ஆக்கப்பூர்வமாக என்ன செய்யப் போகிறார் என்ற தமிழ்நாட்டின் கேள்விக்கு அவர் நேரடியாக பதில் சொல்லி ஆக வேண்டும்’ என பதிவிட்டிருக்கிறார்.

