அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வளைகுடாவில் உள்ள முஸ்லிம் மற்றும் அரபு நாடுகள் இஸ்ரேலை முறைப்படி அங்கீகரித்து “ஆபிரகாம் உடன்படிக்கையில்” கட்டாயமாகக் கையெழுத்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். பாகிஸ்தான் டிரம்பின் இந்த வலியுறுத்தலை இப்போது நிராகரித்துள்ளது. இருந்தபோதிலும் அமெரிக்காவின் பிரஷர் காரணமாக பாகிஸ்தான் தனது நிலைப்பாட்டைச் சீக்கிரமே மாற்றும் எனத் தெரிகிறது. அப்படி மாற்றிக் கொள்ளும்போது பாகிஸ்தானுக்கு புதியதொரு தலைவலி ஏற்படும். அது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
பாலஸ்தீனம்- இஸ்ரேலை சுற்றிக் கடந்த பல ஆண்டுகளாகவே சர்ச்சை நீடிக்கிறது. பாலஸ்தீனத்தை இஸ்ரேல் அங்கீகரிக்க மறுக்கும் சூழலில், வளைகுடா மற்றும் இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேல் மீது கடுங்கோபத்தில் உள்ளன. இதனால் இந்த நாடுகள் எப்போதும் இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுக்கும். இதை மாற்ற அமெரிக்கா பல காலமாகத் தொடர்ந்து முயன்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாகவே ஆபிரகாம் உடன்படிக்கையைக் கொண்டு வந்து, அனைத்து வளைகுடா நாடுகளையும் உள்ளே எடுத்து வர அமெரிக்கா முயல்கிறது. இந்தச் சூழலில் தான் டிரம்ப் சமீபத்தில் இந்த உடன்படிக்கையில் பாகிஸ்தானும் இணைய வேண்டும் என டிரம்ப் குறிப்பிட்டிருந்தார். ஈரானுடனான அமைதி உடன்படிக்கைக்கு இந்த உடன்படிக்கை அத்தியாவசியம் என டிரம்ப் குறிப்பிட்டார். இருப்பினும், தங்கள் சித்தாந்தங்களை விலைபேச முடியாது என்றும் ஒருபோதும் இஸ்ரேலை ஏற்க முடியாது என்றும் பாகிஸ்தான் கூறியது.
டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில், “இந்த மெகா புதிரை முடிக்கச் சவூதி அரேபியா, கத்தார், பாகிஸ்தான், துருக்கி, எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகள் இஸ்ரேலுடன் முறைப்படி உறவை ஏற்படுத்த வேண்டும்.. இந்த உடன்படிக்கை வளைகுடாவை ஒரு மிகப் பெரிய நிதி மற்றும் பொருளாதார வளர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்லும். இதில் இணைய மறுப்பவர்கள் இந்த அமைதி ஒப்பந்தத்தின் எந்தவொரு பகுதியிலும் இருக்க முடியாது” என பிரஷர் கொடுத்துள்ளார்.
டிரம்பின் இந்தக் கட்டளைக்கு உடனடியாகப் பதிலடி கொடுத்துள்ள பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் காவாஜா ஆசிப், “எந்தவொரு கட்டாயத்திற்கும் பணிய வேண்டிய அவசியம் பாகிஸ்தானுக்கு இல்லை.. ஒரு நாள் கூட சொன்ன வார்த்தையைக் காப்பாற்றாத, நம்பகத்தன்மை இல்லாத அந்த மனிதர்களுடன் (இஸ்ரேல்) நாம் எப்படி ஒரே மேஜையில் அமர்ந்து பேச முடியும்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அந்நாட்டின் துணைப் பிரதமர் இஷாக் தாரும் இதை முற்றிலும் நிராகரித்துள்ளார். 1967ம் ஆண்டின் எல்லைகளின்படி, கிழக்கு ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்ட ஒரு சுதந்திர பாலஸ்தீன நாடு அமைவதை இஸ்ரேல் அனுமதிக்கும் வரை, இஸ்ரேலை நாடாக அங்கீகரிக்கப் போவதில்லை என்பதில் பாகிஸ்தான் உறுதியாக நிற்கிறது.

