ஐபிஎல் 2026 தொடரின் பரபரப்பான பிளே-ஆஃப் சுற்றுகள் இன்று தொடங்குகின்றன. இமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் உள்ள எச்பிசிஏ மைதானத்தில் இன்று நடைபெறும் முதலாவது குவாலிஃபையர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. லீக் சுற்றுகளின் முடிவில் இவ்விரு அணிகளும் தலா 14 போட்டிகளில் விளையாடி 18 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தபோதிலும், சிறந்த ரன்-ரேட் அடிப்படையில் ஆர்சிபி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.
இன்றைய முக்கியமான போட்டியில் தர்மசாலா பகுதியில் 80 சதவீதம் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒருவேளை கனமழை காரணமாக போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் முழுமையாக ரத்து செய்யப்பட்டால், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு அது பெரும் பின்னடைவாக அமையும். ஏனெனில், ஐபிஎல் விதிகளின்படி குவாலிஃபையர் அல்லது எலிமினேட்டர் போட்டிகளுக்கு மாற்று நாள் எதுவும் ஒதுக்கப்படவில்லை.
போட்டி முற்றிலும் ரத்தாகும் பட்சத்தில், லீக் சுற்றில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த காரணத்தால் ஆர்சிபி அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். அதே சமயம், தோல்வியடையும் அல்லது மழையால் பாதிக்கப்படும் குஜராத் அணிக்கு இறுதிப்போட்டிக்கு செல்ல குவாலிஃபையர் 2 மூலம் மற்றொரு வாய்ப்பு கிடைக்கும்.
நடப்பு சாம்பியனான ஆர்சிபி தொடர்ந்து இரண்டாவது முறையும், குஜராத் அணி தங்களது இரண்டாவது கோப்பையையும் வெல்லும் முனைப்பில் உள்ளதால் இன்றைய போட்டிக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

