நயாகரா பிராந்திய காவல்துறையினர் ஒரு வருடமாக மேற்கொண்ட தீவிர புலனாய்வின் முடிவில், தெற்கு ஒன்டாரியோவில் இயங்கி வந்த ஒரு பெரிய அளவிலான வாகனத் திருட்டு கும்பலை முறியடித்துள்ளனர். ‘Project Jack Links’ என்று பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கையின் மூலம், சுமார் 5 மில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள திருடப்பட்ட வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.
2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு லெக்ஸஸ் ரக வாகனத்தின் திருட்டில் தொடங்கிய இந்த விசாரணை, பின்னர் ஒரு ஒருங்கிணைந்த குற்றச் செயலாக உருவெடுத்தது. லெக்ஸஸ் மற்றும் டொயோட்டா போன்ற அதிநவீன வாகனங்களை இலக்கு வைத்து இந்த கும்பல் செயல்பட்டு வந்துள்ளது. ஒன்டாரியோவின் பல்வேறு பகுதிகளில் திருடப்படும் இந்த வாகனங்கள், மொன்றியால் துறைமுகம் வழியாக மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஹாமில்டன், ஓக்வில், டொராண்டோ உள்ளிட்ட GTHA பகுதிகளில் 112-க்கும் மேற்பட்ட வாகனத் திருட்டு சம்பவங்களுடன் இந்த கும்பலுக்குத் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 16 மற்றும் 17 வயதுடைய சிறுவர்கள் உட்பட பலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளிகளான ரையான் ரமையா பெருமாளு மற்றும் மாமாடி காபா ஆகியோரைப் பிடிக்கத் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

