கனடாவில் இணையதளம் வாயிலாக நச்சு இரசாயனங்களை விற்பனை செய்து, பதினான்கு பேரின் உயிர் மாய்ப்புக்கு உதவியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அறுபது வயதான கென்னத் லா ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் சமையல்காரரான இவர், உயிர் மாய்ப்பு தொடர்பான ஆன்லைன் கலந்துரையாடல் தளங்கள் மூலம் பழகிய நாற்பது நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு சுமார் ஆயிரத்து இருநூறு நச்சு இரசாயனப் பொதிகளை விநியோகித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில் கால்வாசிப் பொதிகள் பிரிட்டனுக்கு அனுப்பப்பட்டவை ஆகும். வெள்ளிக்கிழமை அன்று ஒன்டாரியோ நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, அரசுத் தரப்புடன் ஏற்பட்ட சமரச உடன்படிக்கையின் ஒரு பகுதியாக இவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து, அவர் மீதான கடுமையான கொலைக் குற்றச்சாட்டுகளை அரசுத் தரப்பு திரும்பப் பெற்றுக்கொண்டது. இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் கனடாவைச் சேர்ந்த உயிர் மாய்ப்பு செய்துகொண்ட நபர்கள் தொடர்பானவை மட்டுமே.
ஆனால், பிரிட்டனில் கென்னத் லா வழங்கிய நச்சுப் பொருட்களால் உயிரிழந்த எழுபத்தொன்பது பேரின் மரணங்கள் தொடர்பாக அவர் மீது பிரிட்டன் அரசுத் தரப்பு வழக்குத் தொடராதது அங்குள்ள பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடையே பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. கென்னத் லாவிற்கு கனடாவில் வழங்கப்படும் தண்டனையின் போது பிரிட்டன் மரணங்களும் கணக்கில் கொள்ளப்படும் என்ற அடிப்படையிலேயே இந்த சமரச உடன்படிக்கைக்கு ஒப்புக்கொள்ளப்பட்டது என பிரிட்டன் அரசு வழக்கறிஞர் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2023 மே மாதம் கைது செய்யப்பட்ட இவருக்கு, கனடா சட்டப்படி அதிகபட்சமாக பதினான்கு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

