ப்ராம்ப்டன் நகரில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 50 முக்கிய சந்திப்புகளில் அதிநவீன 360 டிகிரி கேமராக்கள் மற்றும் தானியங்கி வாகன எண் பலகை அங்கீகார தொழில்நுட்பம் நிறுவப்பட்டுள்ளது. 2 மில்லியன் டாலர் செலவில் செயல்படுத்தப்பட்டுள்ள இந்தத் தொழில்நுட்பம், கடந்த ஓராண்டில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட குற்றப் புலனாய்வுகளுக்குப் பெரிதும் உதவியுள்ளதாக மேயர் பேட்ரிக் பிரவுன் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். இந்த நான்கு லென்ஸ் கொண்ட கேமராக்கள் நிகழ்நேரத்தில் உயர்தரக் காட்சிகளை வழங்குவதோடு, வாகனங்களின் தயாரிப்பு, மாடல் மற்றும் நிறம் போன்ற விவரங்களையும் துல்லியமாகச் சேகரிக்கின்றன.
இந்தக் கேமராக்கள் மூலம் பெறப்பட்ட ஆதாரங்கள் ஏற்கனவே ஒரு கொலை வழக்கு மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் குற்றவாளிகளைக் கண்டறிய உதவியுள்ளதாக பீல் காவல்துறை துணைத் தலைவர் அந்தோணி ஓடார்டி சுட்டிக்காட்டினார். இது குறித்த பொதுமக்களிடம் நடத்தப்பட்ட தொலைபேசி வாயிலாகக் கருத்துக்கணிப்பில் 8,000 பேரில் 84 சதவீதத்தினர் இத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தத் தொழில்நுட்பம் தனிநபர் சுதந்திரத்தைப் பாதிக்காது என்றும், முக அங்கீகார முறை இதில் பயன்படுத்தப்படவில்லை என்றும் காவல்துறை விளக்கமளித்துள்ளது. குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மட்டுமே இதைக் கண்டு அச்சப்பட வேண்டும் என்றும், பிராம்ப்டனை குற்றவாளிகளுக்குப் பாதுகாப்பற்ற நகரமாக மாற்றுவதே தங்களின் இலக்கு என்றும் மேயர் பிரவுன் வலியுறுத்தினார்.

