கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான டோரதி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி 19 நாட்கள் ஆன நிலையில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
டோரதி படத்தில் ரிஷிகாந்த், சனந்த் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கீர்த்தி சுரேஷ் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். படம் வெளிவரும் முன்பே பாடல்கள் பெரிய வெற்றியை பெற்றது.
1990-களின் மதுரை பின்னணியில் நகரும் இப்படம், சிறுவயது நண்பர்களான கார்த்திக் மற்றும் சுப்பு ஆகியோரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. நட்பு, காதல், சாதி, ஆணாதிக்கம், வன்முறை மற்றும் பாலின அடையாளம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கதையின் வழியாக கார்த்திக் சுப்புராஜ் பேசியுள்ளார். குறிப்பாக வழக்கமான கமர்ஷியல் திரைப்படங்களிலிருந்து மாறுபட்ட கதைக்களம் என்பதால் படம் வெளியான நாள் முதலே விவாதத்தையும் ஏற்படுத்தியது.
டோரதி படத்திற்கு ஒரு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்தாலும், சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களும் எழுந்தன. குறிப்பாக படம் கையாண்ட பாலின அடையாளம் மற்றும் LGBTQIA சார்ந்த கருத்துகள் தொடர்பாக ஆதரவும் எதிர்ப்பும் உருவானது. இதனால் படம் வெளியான முதல் சில நாட்களில் சமூக வலைதளங்களில் டோரதி குறித்த விவாதங்கள் தீவிரமடைந்தன.
அதேபோல் கிளைமேக்ஸில் நட்புக்கும் காதலுக்கும் இடையேயான மாற்றம் கையாளப்பட்ட விதம், கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரத்தில் சில விஷயங்களுக்கு போதிய தெளிவு இல்லாதது உள்ளிட்டவை குறைகளாக சில விமர்சனங்களில் சுட்டிக்காட்டப்பட்டன.
இத்தனை விமர்சனங்கள் மற்றும் விவாதங்களுக்கு மத்தியிலும் படம் திரையரங்குகளில் 19 நாட்களை கடந்துள்ளது. நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகம் வந்தாலும் வசூலில் எவ்வித குறையும் வைக்க வில்லை இப்படம் என்கிறார்கள் திரையுலகினர். வெளியாகி 19 நாட்களில் உலகளவில் சுமார் ரூ.20 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

