ஐபிஎல் 2026 தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆர்சிபி மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான ஆட்டத்தில், விராட் கோலி பிடித்த ஒரு அற்புதமான கேட்ச் போட்டியின் போக்கையே மாற்றியுள்ளது. டெல்லி அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் 57 ரன்கள் எடுத்து அபாரமாக விளையாடிக்கொண்டிருந்த போது, குருணால் பாண்டியா வீசிய பந்தை பவுண்டரிக்கு விரட்ட முயன்றார்.
அப்போது மின்னல் வேகத்தில் ஓடி வந்த விராட் கோலி, ஒரு கடினமான கேட்ச்சை மிக லாவகமாக பிடித்து ராகுலை வெளியேற்றினார். ராகுல் ஆட்டமிழந்ததும் ஒட்டுமொத்த சின்னசாமி மைதானமும் கொண்டாட்டத்தில் மூழ்கியது. கேலரியில் இருந்த கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா, எழுந்து நின்று கைதட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 176 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிக்கொண்டிருந்த டெல்லி அணி தற்போது 13 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 115 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
முன்னதாக, முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி, பில் சால்ட்டின் அதிரடி அரைசதத்தால் (63 ரன்கள்) 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. டெல்லி தரப்பில் அக்சர் படேல், குல்தீப் யாதவ் மற்றும் லுங்கி என்கிடி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தற்போது முக்கிய விக்கெட்டுகளை இழந்துள்ள டெல்லி அணி, இக்கட்டான நிலையில் வெற்றியை நோக்கி போராடி வருகிறது.

