ஐபிஎல் 2026 தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இளம் நட்சத்திரம் அபிஷேக் சர்மா வானவேடிக்கை நிகழ்த்தியுள்ளார். ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் வெறும் 47 பந்துகளில் தனது இரண்டாவது ஐபிஎல் சதத்தை பூர்த்தி செய்த அவர், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 135 ரன்களைக் குவித்தார். இதில் 10 இமாலய சிக்ஸர்கள் மற்றும் 10 பவுண்டரிகள் அடங்கும். அபிஷேக்கின் இந்த அதிரடியால் சன்ரைசர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
அபிஷேக் சர்மா இந்த போட்டியின் மூலம் பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளார். குறிப்பாக, டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அதாவது 9 சதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.
மேலும், ஐபிஎல் வரலாற்றில் கிறிஸ் கெயிலுக்கு பிறகு ஒரு இன்னிங்ஸில் இரண்டு முறை 10 சிக்ஸர்களை விளாசிய இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இவருக்கு உறுதுணையாக ஆடிய ஹென்ரிச் கிளாசென் 13 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் உயர உதவினார்.
அபிஷேக்கின் இந்த அசுரத்தனமான பேட்டிங்கை கண்டு சன்ரைசர்ஸ் உரிமையாளர் காவ்யா மாறன் மைதானத்தில் உற்சாகத்தில் துள்ளி குதித்தார். அதேபோல், அபிஷேக்கின் தந்தை ராஜ் குமார் சர்மாவும் தனது மகனின் இந்த வரலாற்று சாதனையைக் கண்டு நெகிழ்ச்சியடைந்தார்.
ஹைதராபாத் மைதானமே ‘அபிஷேக்… அபிஷேக்…’ என்ற முழக்கத்தால் அதிர்ந்தது. சன்ரைசர்ஸ் அணி நிர்வாகமும் ரசிகர்களும் இந்த அதிரடி ஆட்டத்தை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

