ராஜஸ்தான் மாநிலம் டீக் மாவட்டத்தில் உள்ள பாமன்வாடி கிராமத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவின் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இந்த வீடியோவில், மணமகன் ஒருவர் சுமார் 100 அடி நீளமுள்ள பிரம்மாண்ட மாலையை அணிவதற்காக ஏணியில் ஏறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த மாலையானது முழுவதுமாக 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளால் கோர்க்கப்பட்டிருந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ருக்னுதீன் மேயோ மற்றும் அவரது மருமகன் அன்சார் மேயோ ஆகிய இரு மணமகன்களும் இந்த நீண்ட மாலையை அணிந்து திருமண சடங்குகளில் பங்கேற்றனர். உள்ளூர் மக்கள் மற்றும் பஞ்சாயத்து தலைவர் இது குறித்து கூறுகையில், இது அந்த பிராந்தியத்தில் பின்பற்றப்படும் ஒரு பாரம்பரிய வழக்கம் என்றும், இத்தகைய மாலைகள் ஹரியானாவின் நூ பகுதியில் வாடகைக்கு கிடைக்கின்றன என்றும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சரண் கோபிநாத் காம்ப்ளே, இந்த மாலை வாடகைக்கு எடுக்கப்பட்டது என்றும், இதில் சட்டவிரோத செயல்கள் ஏதும் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் உறுதிப்படுத்தியுள்ளார். சமூக வலைதளங்களில் பல விவாதங்களை ஏற்படுத்தியுள்ள இந்த 20 வினாடி வீடியோ, ராஜஸ்தானின் மேவாட் பிராந்தியத்தின் வினோத கலாச்சாரத்தை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது.

