1984-ஆம் ஆண்டு நடிகர் மோகன் மற்றும் ஊர்வசி நடிப்பில் வெளியான ‘ஓ மானே மானே’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் சுதா அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக தமிழில் சரத்குமார் நடித்த ‘கேப்டன்’, செல்வராகவன் இயக்கிய ‘7ஜி ரெயின்போ காலனி’, சூர்யா நடித்த ‘சில்லுனு ஒரு காதல்’, அஜித்குமார் நடிப்பில் வெளியான ‘வேதாளம்’ மற்றும் சமீபத்தில் வெளியாகி ஹிட்டடித்த ‘லக்கி பாஸ்கர்’ போன்ற பல வெற்றிப் படங்களில் இவரது நடிப்பு பெருமளவு பேசப்பட்டது. இதுமட்டுமின்றி, தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்து ஆஸ்தான குணச்சித்திர நடிகையாக வலம் வந்தவர். வெள்ளித்திரை மட்டுமல்லாது சின்னத்திரையிலும் ஏராளமான மெகா சீரியல்களில் நடித்துள்ளார்.
சினிமாவில் கொடிகட்டிப் பறந்த காலத்தில் பல கோடிகளை சம்பாதித்த சுதா, அந்த பணத்தை எல்லாம் டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டல் தொழிலில் முதலீடு செய்துள்ளார். ஆரம்பத்தில் அந்த தொழில் அவருக்கு நல்ல லாபத்தைக் கொடுத்துள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்த அவர், மேலும் ஒரு ஹோட்டலை தொடங்கி முதலீடுகளை அதிகப்படுத்தியுள்ளார்.
ஆனால், எதிர்பாராத விதமாக பிசினஸில் ஏற்பட்ட சில சதிகளால், அவர் போட்ட ஒரே ஒரு தவறான கையெழுத்து மாபெரும் வினையாக முடிந்துள்ளது. ஒரு சிறு தவறால் அவருக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் அனைத்தும் பறிபோய், மிகப்பெரிய பொருளாதார இழப்பை அவர் சந்தித்துள்ளார்.
இந்த பல கோடி ரூபாய் நஷ்டம் சுதாவின் குடும்பத்திலும் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. சொத்துக்கள் அனைத்தையும் இழந்துவிட்டதால், அவரது மகனுக்கும் சுதாவுக்கும் இடையே கடுமையான மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த அவரது மகன், சுதாவை தவிக்கவிட்டு வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டார். இதுமட்டுமின்றி, அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய கணவரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் அவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார்.
ஒரு காலத்தில் பெரும் புகழோடும், செல்வச் செழிப்போடும் வாழ்ந்த நடிகை சுதா, தற்போது பணமும் இல்லாமல், சொந்தக் குடும்பத்தின் அரவணைப்பும் இல்லாமல் தனிமரமாய் வாழ்ந்து வருகிறார். இந்த சோகமான தகவல்களை சமீபத்திய பேட்டி ஒன்றில் சுதாவே கண்ணீருடன் பகிர்ந்துள்ளார். திரைத்துறையில் பல குடும்பங்களை சேர்த்து வைக்கும் பாசக்கார அம்மாவாக நடித்த சுதாவுக்கு, நிஜ வாழ்க்கையில் இப்படி ஒரு நிலைமையா என சமூக வலைதளங்களில் இந்த வீடியோ தற்போது வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.

