பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை கடுமையாக விமர்சித்து திமுக எம்.பி தயாநிதி மாறன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடுவதாக குற்றம் சாட்டியுள்ள அவர், தமிழ்நாட்டில் மட்டும் #NoDelimitation என்று நாடகம் நடத்துவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். தவெக அரசை தூண்டிவிட்டு தமிழ்நாட்டில் எம்.பி.க்கள் கூட்டத்தை நடத்தும் காங்கிரஸ், தான் ஆளும் நான்கு மாநிலங்களில் ஏன் இது போன்ற கூட்டங்களை நடத்தவில்லை என்று அவர் சாடியுள்ளார்.
மேலும், தொகுதி மறுவரையறையை ஆதரித்து தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசி வரும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் காங்கிரஸ் கட்சி முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுப்பது ஏன் என்றும் தயாநிதி மாறன் விளாசியுள்ளார்.
தெளிவான கொள்கை இல்லாமல் காங்கிரஸ் கட்சி செய்து வருவது வெறும் மலிவான அரசியல் என்று குறிப்பிட்ட அவர், நச்சுப்பாம்பை போன்ற காங்கிரஸ் கட்சியின் கைப்பாவையாக செயல்படும் கட்சிகளின் நாடகங்களை மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள் என்றும் தனது பதிவில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த ட்வீட் அரசியல் வட்டாரங்களில் தீயாய் பரவி வருகிறது.

