வொஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் நேற்று மாலை நடைபெற்ற வெள்ளை மாளிகை செய்தியாளர் சங்கத்தின் வருடாந்த இரவு விருந்து நிகழ்வில் திடீர் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சத்தம் கேட்ட உடனேயே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் முதற்பெண்மணி மெலனியா ட்ரம்ப் ஆகியோரை இரகசிய சேவை அதிகாரிகள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர்.
மண்டபத்திற்குள் ஒருவித பதற்றமான சூழல் நிலவியதாகவும், சத்தம் கேட்டவுடன் அங்கிருந்த விருந்தினர்கள் அச்சத்தில் தரையில் விழுந்து பாதுகாப்பைத் தேடியதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாதுகாப்புப் பிரிவினர் பிரதான மேடையைச் சூழ்ந்து கொண்டு பலத்த பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தினர்.
இந்தச் சம்பவம் தொடர்பாகச் சந்தேக நபர் ஒருவர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்துக் கருத்துத் தெரிவித்த செய்தியாளர்கள் சங்கத் தலைவி வெய்ஜியா ஜியாங், பாதுகாப்பு விசாரணைகள் தொடர்வதாகவும், தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிகழ்வு மீண்டும் தொடரும் என்றும் அறிவித்தார். இச்சம்பவம் வெள்ளை மாளிகை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

