அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ‘TRUMP 2028’ என்று எழுதப்பட்ட தொப்பியுடன் இருக்கும் படத்தை தனது சமூக வலைதளமான ட்ரூத் சோசியலில் பகிர்ந்துள்ளதால், அவர் 2028-ம் ஆண்டு மீண்டும் போட்டியிடுவது குறித்து அரசியல் வட்டாரத்தில் மீண்டும் விவாதங்கள் எழுந்துள்ளன.
“நாம் வெல்ல போகிறோம்” என்ற வாசகத்துடன் அந்த படம் வெளியிடப்பட்டுள்ளது. எனினும், அமெரிக்க அரசியலமைப்பின் 22-வது திருத்த சட்டத்தின்படி, ஒரு நபர் இருமுறை மட்டுமே அதிபராக தேர்ந்தெடுக்கப்பட முடியும் என்பதால், மூன்றாவது முறை அவர் போட்டியிடுவதற்கான வாய்ப்பு சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, சட்டம் மிகவும் வலுவானது என்றும், தான் மீண்டும் போட்டியிட விரும்புவதாகவும் டிரம்ப் கூறியிருந்தார். 1951-ல் கொண்டுவரப்பட்ட இந்த சட்டத்திருத்தம், பிராங்க்லின் டி. ரூஸ்வெல்ட் நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து அமல்படுத்தப்பட்டது.
டிரம்ப் ஏற்கனவே 2016 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால், நடப்பு விதிகளின் கீழ் அவரால் மீண்டும் போட்டியிட முடியாது. தற்போதைய சமூக வலைதளப் பதிவுகள் வெறும் யூகங்களையும் விவாதங்களையும் மட்டுமே தூண்டியுள்ளன.

